உ
சிவமயம்
உலகெலாம் உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
மானுடம் போற்றும் மகத்தான நகரத்தார் குலத்தில் வந்துதித்து சிவகங்கை மாவட்டத்தில் கொத்தமங்கலம் கிராமத்தில் மண் மனம் மாறாமல் பல தசாப்தங்கள் கடந்து இன்றளவும் பழமை மாறாது ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் இறுதி வார வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு தினங்களும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது அருள்தரும் அன்னை ராசாத்தாள் படைப்பு நிகழ்வு.
இந்த வரலாற்று சிறப்புமிக்க படைப்பு நிகழ்வில்...
கொத்தமங்கலம், கண்டனூர், ஆத்தங்குடி, இராயவரம், கோட்டையூர், கீழச்சிவல்பட்டி மற்றும் காரைக்குடி ஆகிய ஏழு ஊர்களில் வாழும் மாத்தூர் கோயிலில் அரும்பாக்கூர் பிரிவினைச் சேர்ந்த நகரத்தார் பெருமக்களால் மேற்படி இரண்டு தினங்களும் அருள்தரும் அன்னை ராசாத்தாளுக்கும், அருள்மிகு ஸ்ரீ கருப்பருக்கும் பாற்சோறிட்டு, பணியாரம் சுட்டு, பல்லயம் போட்டு, ஆச்சிமார்கள் மாவிளக்கு ஏற்றி, தொட்டில் கட்டி உரு வைத்து, நெய்காணிக்கை செலுத்தி தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி வரும் அற்புதமான அருட்காட்சிகளைக் காணக் கண் கோடி வேண்டும்.
வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் அம்பாளுக்கு படைத்த பூஜைப் பொருட்களின் ஏல நிகழ்வு மிகவும் சுவாரசியமாகவும் வேண்டுதலின் வெளிப்பாடாகவும் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.